Tamilnadu
“வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தவேண்டும்” : SBI பொது மேலாளருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்!
வாடிக்கையாளர்கள், குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்தும்படி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முத்திரைத்தாள் வாங்குவதற்காக, முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், அரசுக்கு செலுத்தும் தொகைக்கு, பணம் கையாள்வதற்கான கட்டணம் வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கியான எஸ்.பி.ஐ-க்கு தடை விதிக்கக் கோரி முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், முத்திரைத்தாள் வாங்குவதற்காக அரசு கருவூலத்துக்கு செலுத்தப்படும் தொகைக்கு பணம் கையாள்வதற்கான கட்டணத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கருவூல இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ள போதிலும், அதற்கு பதிலளிக்காத எஸ்.பி.ஐ அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அரசு அதிகாரிகளின் கடிதங்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல இந்த வழக்கில் எஸ்.பி.ஐ வங்கி சார்பில் பதில் மனு தாக்கல் செய்த அதிகாரிகள், மனுதாரர்கள் வேறு வங்கிகளில் கணக்கு துவங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பொறுப்பற்ற முறையில் ஆணவத்துடன் நீதிமன்றத்துக்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள், குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை நல்ல முறையில், கவுரவமாக நடத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த எஸ்.பி.ஐ பொது மேலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ரிசர்வ் வங்கி உத்தரவில் அரசுடனான பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறாததால், முத்திரைத்தாள் கொள்முதலுக்காக செலுத்தப்படும் தொகைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவையும், இதுசம்பந்தமான சுற்றறிக்கையும் அனைத்து கிளைகளுக்கும் அனுப்ப எஸ்.பி.ஐ. வங்கியின் பொது மேலாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !