Tamilnadu

200 வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்: மழைக்கால நோய்களில் இருந்து வருமுன் காக்கும் முதல்வர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கும் விதமாக இன்று சென்னை, தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அன்று ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையின் சார்பில் பருவமழை காலத்தை முன்னிட்டு ஏற்படக் கூடிய தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் 200 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு இரண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள், என மொத்தம் 400 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட உத்தரவிட்டார்கள்.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் முதற்கட்டமாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: “உங்களின் மனிதாபிமான செயல்பாடு பெருமை சேர்த்துள்ளது” : காவலர் ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு!