Tamilnadu

“தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்க்க உதவிய போலிஸ் இன்ஸ்பெக்டர்” : யார் இந்த ராஜேஸ்வரி?

மயங்கி விழுந்த இளைஞரை தோளில் சுமந்து சென்ற பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நகர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதையடுத்து மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், போலிஸார், பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறார்கள்.

சென்னை டி.பி. சத்திரம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாக அங்கேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார்.

அப்பகுதியில் மரம் விழுந்ததால் மக்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் மீட்பு பணிக்காக விரைந்தனர்.

அப்போது அங்கே பணிபுரியும் ஊழியர் ஒருவர் மயங்கிய நிலையில் சுருண்டு கிடந்துள்ளார். அருகே மரங்கள் முறிந்து விழுந்து கிடந்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதினர்.

ஆனால், டி.பி. சத்திரம் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சற்றும் தாமதிக்காமல் மயங்கிக் கிடந்த இளைஞரை தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து பிறகு ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்தச் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபுவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இதுபோன்ற துணிச்சலான செயல்களுக்குப் பெயர்போனவர். கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலகக் காலனியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியபோதும், அப்பகுதியில் குடும்பத்தினர் கைவிட்ட பெண்களைக் காப்பாற்றுவது, ஏழைகளுக்கு உதவுவது என தொடர்ச்சியாக நற்பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து பொதுமக்களின் நண்பராகவே செயல்பட்டு வந்தார். அயனாவரம் சிறுமி வன்புணர்வு வழக்கில் 13 பேரை பிடித்தவர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சூரில் நடந்த காவல்துறை மாநாட்டில் ஐ.பி.எஸ் அல்லாத போலிஸ் அதிகாரிகளில் துணிச்சலுக்கான விருது பெற்றவர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நிவாரண முகாமில் இருந்த மக்களை நெகிழவைத்த போலிஸார்... கொட்டும் மழையில் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்!