Tamilnadu

45 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்; வெளியே யாரும் வர வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வேற்று வலுப்பெற்று சென்னை அருகே நகர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் நேற்று மதியத்திலிருந்தே விடாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. மேலும் இன்று காலையிலிருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் விழுந்துள்ள மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன்," காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு மேற்கில் 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கக் கூடும்.

இதனால் சென்னையில் இன்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு நேற்றே ரெட் அலர்ட் விடப்பட்டதை அடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ₹8,820 கோடியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் எங்கே? - அதிமுகவினரை நோக்கி பாயும் கேள்விக்கணைகள்!