Tamilnadu
"உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! சேவைக்கு தலைவணங்குகிறேன்!" : நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கப் பணியாற்றும் அனைவரது சேவைக்கும் தலைவணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், இன்று கரையைக் கடந்து வருகிறது. இதனால் மழை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் சென்னையின் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் என அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட இளைஞரை தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்ற உதவிய பெண் காவல் ஆய்வாளர், கொட்டும் மழையிலும் மின் கம்பத்தில் ஏறி பணி செய்த மின் துறை பணியாளர்கள், வெள்ள பாதிப்புகளை அகற்ற முழுவீச்சில் செயல்பட்டு வரும் அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்களின் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கப் பணியாற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “தொடர் மழை - அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர் துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.
தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்! மக்களைக் காப்போம்!
உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!