Tamilnadu

“108 ஆம்புலன்ஸ் எண் செயல்படவில்லையா?” - முற்றிலும் தவறான தகவல் என விளக்கம்!

108 ஆம்புலன்ஸ் எண் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக செயல்படவில்லை எனப் வாட்ஸ்-அப்பில் பரவிவரும் தகவல் முற்றிலும் தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் செய்து வரும் சேவை அளப்பரியது. பொதுமக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய இந்த அவசர உதவி சேவை பற்றி ஒரு தகவல் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பரவி வருகிறது.

அதில், “108 ஆம்புலன்ஸ் எண் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக செயல்படவில்லை என்றும், அதற்கு மாற்றாக 044-71709009 என்ற எண் நிர்வாகத்தால் அவசர ஆம்புலன்ஸ் ஊர்தியை அழைக்க கொடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை இச்செய்தியை பகிருங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வாறான எந்தவொரு அறிவிப்பும் தமிழக அரசால் வெளியிடப்படவில்லை. வாட்ஸ்-அப்பில் பரவிவரும் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என 108 சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 8, 2020 அன்று 108 அவசர உதவி எண் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 2 மணிநேரம் இயங்காதபோது 044-40170100 என்ற மாற்று எண்ணை அறிவித்திருந்தனர். பிறகு, அந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது பகிரப்படும் இந்த எண் பயன்பாட்டிலேயே இதுவரை இல்லாததாகும்.

ஆனால், இவ்வாறு தவறான தகவலை மழை, வெள்ளம் போன்ற பேரிடர் அவசர காலங்களில் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இச்செயல் தவிர்க்கப்பட வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.

Also Read: ‘கோஷம் போடுங்க தப்பில்ல.. திருப்பி போட்டா தாங்கணும்’ : வம்பு செய்தவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!