Tamilnadu

“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் 2 பேருக்கு சம்மன்” : லிஸ்டில் சேர்ந்த அ.தி.மு.க முக்கியப்புள்ளிகள்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை கடந்த காலங்களில் முறையாக நடைபெறவில்லை எனவும், மீண்டும் விசாரணை நடத்த வேண்டுமென சோலுர்மட்டம் போலிஸார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபாவிடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி மறு புலன் விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன் 5 தனிப்படை போலிஸாரை நியமித்து நீதிபதி சஞ்சய் பாப்பா உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலிஸார் இதுவரை கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கொடநாடு எஸ்டேட் கணினி பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட தினேஷ் தகப்பனார் போஜராஜன் உட்பட தாய், சகோதரி, வாகன விபத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளியான கனகராஜன் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் உட்பட 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற நள்ளிரவு அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்ற அப்போதைய அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மேலவை உறுப்பினர் அர்ஜுனன், அ.தி.மு.க கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் ஆகியோரிடம் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை உதகையில் உள்ள கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வரும் பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தனிப்படை போலிஸார் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ‘என் பாக்கெட்டுனு நினைச்சு உங்க பாக்கெட்டுல’ - போலிஸுக்கு பளார் விட்டு ஜகா வாங்கிய பாஜக நிர்வாகி! Video