Tamilnadu
கவரிங் நகையை எக்ஸ்சேஞ்ச் செய்து மோசடி; தமிழ்நாடு முழுவதும் வேலையை காட்டிய பலே கில்லாடி பெண் கைது!
சென்னையை ஆதம்பாக்கம் கக்கன் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் தகலாராம் சவுத்ரி (43). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் தன்னை உமா என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகளை வாங்க வந்திருப்பதாக கூறி நகைகளை கொடுத்து 7 பவுன் நகைகளை வாங்கி சென்றுவிட்டார்.
அதன்பிறகு நகையை பரிசோதனை செய்து பார்த்தபோது நகைகள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. உடனே இது குறித்து ஆதம்பாக்கம் போலிஸில் புகார் செய்யப்பட்டது. போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆதம்பாக்கம் கருணீக்கர் தெருவில் நகைக்கடை நடத்தி வரும் ஜதேந்தர் குமார் (51) என்பவரின் கடைக்கு வந்த பெண் ஒருவர் நகைகளை பார்த்து எதையும் வாங்காமல் சென்று விட்டார். அப்போது பார்த்த போது கடையில் இருந்த ஒன்றரை பவுன் கம்மல் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்தும் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சம்பந்தப்பட்ட நகைக் கடைகளின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பெண்ணின் உருவத்தை பார்த்தபோது போலி நகை கொடுத்து தங்க நகை வாங்கிச் சென்றவரும் நகையை திருடிச் சென்ற பெண்ணும் ஒருவரே என்பது தெரியவந்தது.
இதையடுத்து நகைக்கடை உரிமையாளர்கள் சக நகைக் கடை உரிமையளர்களுக்கு மோசடி பெண் குறித்த புகைப்படத்தை வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் உள்ளகரம் ஆயில்மில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து மோசடி பெண் மற்றுமொருவருடன் வந்ததை கண்ட நகைக்கடை உரிமையாளர் போலிஸாருக்கு தகவல் தந்தார்.
ஆதம்பாக்கம் போலிஸ் விரைந்து சென்று பெண் உள்பட 2 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் தாதக்காப்பட்டியை சேர்ந்த ராதா (35) அவரது உறவினரான சேலம் கொண்டாரம் பட்டியை சேர்ந்த கவுரிசங்கர் (33) என தெரியவந்தது.
விசாரணையில், இவர்களுடன் சாந்தி என்ற பெண்ணும் சேர்ந்து தங்க நகைகள் போல் போலியான நகைகளை கொண்டு வந்து நகை கடையில் பழைய நகைக்கு புதிய நகை வாங்க வேண்டும் என வருவதும் தங்கத்தை பரிசோதிக்கும் போது தங்க நகையை தந்து விட்டு புதிய நகை வாங்கும் போது போலியான நகையை தந்து ஏமாற்றி சென்று விடுவார்கள் என தெரிவித்தனர்.
இவர்கள் திண்டுக்கல், சென்னை மாம்பலம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல நகைக் கடைகளில் மோசடி, திருட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து மோசடி செய்ய வைத்திருந்த போலி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!