Tamilnadu

“ஓய்வூதிய சேமிப்புத் தொகை கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பு?” : ‘PFRDA ACT’ சட்டத்தை மாற்றியமைக்கும் மோடி அரசு!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றதில் இருந்து, இந்தியப் பொருளாதாரம் பலத்த சரிவைச் சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை வெகுவாக அதிகரித்ததோடு, பல நிறுவனங்களை மூடக்கூடிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிப்பதற்காக, அடிக்கடி செய்தியாளர்களைச் சந்தித்து ஏதாவது புதிய புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிவந்தார். ஆனால், அவை எந்தப் பயனும் அளிக்காதநிலையில், தற்போது மத்திய அரசிடம் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் கூட ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது, அனைத்து ஓய்வூதியர்களின் சேமிப்புத்தொகையையும் இவ்வாறு ஊக வணிகத்தில் ஈடுபடுத்திட ஒன்றிய அரசு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஓய்வூதிய முறை அறக்கட்டளையை, 2013ஆம் ஆண்டு ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி அதிகாரக்குழுமச் சட்டத்திலிந்து (PFRDA ACT,2013) தனியே பிரித்து, ஊக வணிகத்தில் செலுத்துவதற்காக, கம்பெனிச் சட்டத்தின் கீழ் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இதுபோன்று ஊழியர் வைப்பு நிதியிலிருந்த (Employees Provident Fund) சேமிப்பு ஊக வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டு, தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் தங்கள் சேமிப்புத் தொகைகளை ஏற்கனவே பறி கொடுத்துள்ளார்கள்.

இப்போது அனைத்து ஓய்வூதியர்களின் சேமிப்புத்தொகையையும் இவ்வாறு ஊக வணிகத்தில் ஈடுபடுத்திட ஒன்றிய அரசு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்நாள் ஓய்வூதிய சேமிப்புத் த்தொகைகளையும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்காக, ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் நடத்தாதது யார் குற்றம்?: மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கையை சாடிய முரசொலி!