Tamilnadu

குண்டர் சட்டத்தை தொடர்ந்து மீண்டும் ஜாமின் மனு தள்ளுபடி.. வன்முறையை தூண்ட முயன்றதால் சிக்கிய கல்யாணராமன்!

ட்விட்டரில் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், கடந்த 2 மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கல்யாணராமனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

அவருக்கு ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையே, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்யாணராமன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, கல்யாணராமன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்யாணராமனின் ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்த போது சென்னை தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி கல்யாணராமனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றும் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, கல்யாணராமனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Also Read: “ஜாமின் கிடையாது” : தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் கல்யாணராமன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!