Tamilnadu

“அடுத்த ரெய்டு யாருக்கு?” : அமைச்சர் சேகர்பாபு சூசகம்!

குயின்ஸ் லேண்ட் நிலத்தை 2 நாட்களில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில், கோயில்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, தங்கும் விடுதிகள், அன்னதானக்கூடம், முடிகாணிக்கை செலுத்தும் இடம், கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்துமிடம், ஆம்புலன்ஸ், யானைகள் பராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்துமிடம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருச்செந்தூர் கோயிலைச் சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு உயரம் குறைந்த கட்டிடங்கள் கட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அன்னதானக்கூடம் கீழ்தளம், முதல்தளம் என 1,000 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் அளவிற்கு திட்டங்கள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையில், டி.வி., கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்கமுடியாத இடம் கிடையாது. இன்னும் 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசுக்கு நெருங்க முடியாத இடமென்று எதுவுமில்லை.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே, தற்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தவறு செய்திருந்தால், நிச்சயம் அவரும் விசாரணை செய்யப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையில் முந்தைய ஆட்சியின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விரைவில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அமைச்சரும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Also Read: இது அடிபணியும் ஆட்சி கிடையாது; கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கே அழுத்தம் தேவை - BJPக்கு சேகர்பாபு தக்க பதிலடி