Tamilnadu

பதட்டமடைந்த சிறுமியை ‘கூல்’ செய்த முதலமைச்சர் - தி.மு.க வெற்றி வேட்பாளர்கள் சந்திப்பு விழாவில் ருசிகரம்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது சிறுமி ஒருவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பொறுப்பினையும் தி.மு.க அணியே பெறவிருக்கிறது.

1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களிலும் 1,000 இடங்களுக்கும் கூடுதலாக தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொறுப்புகளில் 73 பொறுப்புகள் தி.மு.க அணியின் வசமாகியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற பகுதிகளிலும் தி.மு.க வெற்றியைக் குவித்துள்ளது.

வரலாறு காணாத வகையில் வெற்றியைக் குவித்த தி.மு.க வேட்பாளர்கள், தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற வேண்டி சென்னையில் குவிந்து வருகின்றனர்.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்றும், இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.

இன்று வெற்றி பெற்றவர்களைச் சந்திக்கும் நிகழ்வின்போது வெற்றி வேட்பாளர் ஒருவரின் குழந்தை ஒருவர் மைக் வாங்கி பேசத் தொடங்கினார். ஆனால், பேசும்போது கூட்டத்தைப் பார்த்து சற்று பதட்டமடைந்ததால் அவரால் மேற்கொண்டு பேச இயலவில்லை.

இதைக் கவனித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தச் சிறுமியை அருகே அழைத்து கைகுலுக்கி, அவரிடம் பெயர் விசாரித்து அனுப்பிவைத்தார். அச்சிறுமி முதல்வரிடம் தான் சஞ்சனாஸ்ரீ என அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்த நிகழ்வு அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read: “எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்ற இறுமாப்பு எனக்கு ஒருபோதும் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்