Tamilnadu

திருச்செந்தூர் கோயில் கற்களைப் பெயர்த்தெடுத்த கான்ட்ராக்டர்.. அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடு காரணமா?

அ.தி.மு.க ஆட்சியின் முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமாகி வரும் சூழலில், திருச்செந்தூர் கோயிலில் ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததால் அந்த ஒப்பந்ததாரர் கோயில்களில் அமைக்கப்பட்ட கற்களை பெயர்த்து எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றின் போது, ஆறுமுகநேரியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மூலம் கோயில் வளாகத்தில் கற்கள் பதிக்க ஒப்பத்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, ரூ.4,53,000 மதிப்பில் கோயில் வளாகத்தில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. அதேபோல், கோயிலின் வடக்கு பகுதி, கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் கற்கள் 9,340 சதுர அடி பரப்பளவில் பதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கான முழு தொகையை கோயில் நிர்வாகம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. இதனையடுத்து சண்முகத்தின் தொடர் அழுத்தம் காரணமாக இந்தப் பணிக்காக ரூ.3,65,000 தொகையை மட்டும், அதுவும் பல கட்டமாக கோயில் நிர்வாகம் வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.88,000 பணத்தை கடந்த 2 ஆண்டுகள் ஆகியும் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது.

இதனால் பல முறை கோரிக்கை வைத்தும் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் கோயில் வளாகத்திற்கு 20 ஆட்களுடன் வந்த சண்முகம், வளாகத்தில் பதிக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களை அகற்ற ஆரம்பித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள், அங்குள்ள காவல் நிலையத்திற்கு இதுதொடர்பாக தகவல் அளித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் சண்முகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலிஸ் தரப்புடன் நடந்த வாக்குவாதம் ஒருமணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதன்பின்னர், திருக்கோயில் உதவி பொறியாளர் சந்தனகிருஷ்ணன் மீதித்தொகையான ரூ.88,000-க்கு தனது சொந்தக் காசோலையை வழங்கினார். இதையடுத்து பெயர்தெடுக்கப்பட்ட கற்களை மீண்டும் அதே இடத்திலேயே பதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த இழுத்தடிப்பு விவகாரத்தில் பின்னணியில் முறைகேடுகள் நடந்துள்ளதுள்ளதாகவும், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் இதில் தொடர்பில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவு குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பிளாஸ்டிக் ஒழிப்பு: தமிழக அரசுக்கு பாராட்டு.. ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” - ஐகோர்ட் கேள்வி!