Tamilnadu
“தமிழ்நாட்டில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்திவிட்டோம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் இதுவரை 5,01,30,323 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று மாநில தடுப்பூசி மருந்து கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பணிகள் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை, மேலும் விரிவாக்கம் செய்யும் பொருட்டு சிறப்பு முகாம்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு முதலாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 12.09.2021 அன்று நடைபெற்றதில் 28.91 லட்சம் பயனாளிகளுக்கும், இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 19.09.2021 அன்று நடைபெற்றதில் 16.43 லட்சம் பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 26.09.2021 அன்று நடைபெற்றதில் 25.04 லட்சம் பயனாளிகளுக்கும் மற்றும் நான்காவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 03.10.2021 அன்று நடைபெற்றதில் 17.40 லட்சம் பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 87,80,262 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுவரை (07.10.2021) தமிழ்நாட்டில் 5,01,30,323 பயனாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மையங்களின் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 3,73,18,608 பயனாளிகளுக்கும் (64%) மற்றும் இரண்டாவது தவணையாக 1,28,11,715 பயனாளிகளுக்கும் (22%) செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 10.10.2021 அன்று நடைபெற தகுந்த முன் ஏற்பாடுகள் செய்யும் பொருட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று (07.10.2021) மாநில தடுப்பூசி மருந்து கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தற்போது 50.12 இலட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. அடுத்து வரும் மூன்று நாட்களில் சுமார் 6 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டாலும் ஐந்தாவது சிறப்பு முகாமிற்கு சுமார் 44 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, சுமார் 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மூன்றாம் முறையாக மக்களிடையே உள்ள கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு (Sero Surveillance Survey) நடத்தப்பட்டதில் விருதுநகர், தென்காசி மற்றும் சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் 80% அதிகமாகவும் பெரம்பலுர், அரியலுர், நீலகிரி மற்றும் கருர் மாவட்டங்களில் 60% குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மேற்கூறிய 4 மாவட்டங்களுக்கு தடுப்பூசி பணிகளை மேம்படுத்தும் பொருட்டு அதிகமான அளவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!