Tamilnadu

போலி வருமான வரித்துறை அதிகாரியாக உலாவந்த முன்னாள் போலிஸ்.. உண்மை வெளிவந்ததால் தற்கொலை - நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கோவையில் காவலராக பணியாற்றி வந்தார். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் விட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால், சிவக்குமாரின் குடும்பத்தினர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு தனக்குத் திருப்பூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளதாக மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.பிறகு தினமும் அலுவலகம் செல்வது போல் நடித்து குடும்பத்தினரை ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மனைவியிடம் ஈரோடு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சிவக்குமாருக்கு மனைவி பிரேமலதா செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சிவகுமார் போனை எடுக்கவில்லை.

இதனால், கணவன் வேலை செய்வதாகக் கூறிய வருமான வரித்துறை அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது சிவக்குமார் என்ற பெயரில் இங்கு யாரும் வேலை பார்க்கவில்லை என கூறியுள்ளனர். இதை கேட்டு பிரேமலதா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், அரச்சலூர் பகுதியில் காரில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற போலிஸார் இறந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடும்பத்தாரை ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் மோசடியால் காவலர் பலி” : விசாரணைக்கு பயந்து காவலர் எடுத்த விபரீத முடிவு!