Tamilnadu
“இனி வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது” : அதிரடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபகுதியாக நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின், ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓட்டேரி நல்லா கால்வாய், பாடி மேம்பாலம் அருகில் தொடங்கி வடசென்னை வடக்கு பக்கிங்ஹாம் கால்வாயின் பேசின் பாலம் அருகில் வந்து இணைகிறது. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.84 மீட்டர் நீளமுள்ள இக்கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை ரூ.44 லட்சம் மதிப்பில் கனரக வாகனங்கள் மற்றும் மிதவை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்வர் திரு.வி.க நகர் மண்டலம் ஸ்ட்ரான்ஸ் ரோடு மற்றும் கொண்ணூர் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் நீர்வள ஆதாரத் துறையின் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், கொளத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் வாழும் சுமார் 30 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 769 கி.மீ. நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அண்ணா நகர் மண்டலம், வார்டு எண்-94ல் பாபா நகரில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ள நீரையும் மற்றும் அருகில் உள்ள பூம்புகார் நகர், ஜானகிராம் காலனி, எஸ்.ஆர்.பி.நகர், சீனிவாசா நகர், செந்தில் நகர் உமா மகேஷ்வரி நகர், செல்வி நகர், அஞ்சுகம் நகர், சரோஜினி நகர், ஐயப்பா நகர், கே.கே.ஆர்.கார்டன், பழனியப்பா நகர் ஆகிய இடங்களில் தேங்கும் மழை நீரையும் வெளியேற்றும் வகையில் 33 கி.மீ நீளத்திற்கு கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.102.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாதவரம் மண்டலம், பிரிட்டானியா நகரில் மழைக் காலங்களில் தேங்கும் வெள்ள நீரையும் மற்றும் கலெக்டர் நகர், செந்தில் நகர், வேலம்மாள் நகர், INTUC நகர், பிர்லா அவென்யூ, ரங்கா அவென்யூ, ராசி நகர் ஆகிய இடங்களில் தேங்கும் மழை நீரையும் வெளியேற்றும் வகையில் 31 கி.மீ. நீளத்திற்கு கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.122.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மணலி மண்டலம், ஆமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில், நீர்வள ஆதாரத் துறை சார்பில் ரூ.87.50 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் ஆகாயத் தாமரை மற்றும் நீர் தாவரங்களை அகற்றும் பணிகளையும், உபரி நீர்க் கால்வாயின் பாலங்கள் சீர்செய்யும் பணிகளையும், கொசஸ்தலை ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார்.
பின்னர், தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் கால்வாயில் தேங்கியுள்ள சேறு, சகதி, ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் தாவரங்களை ரொபாடிக் மல்டி பர்ப்பஸ் எஸ்கலேட்டர் இயந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணிகளையும், கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் கால்வாய் இணையும் இணைப்புக் கால்வாயில் ஆம்பிபியன் வாகனங்கள் கொண்டு ஆகாயத்தாமரை அகற்றும் பணி மற்றும் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல் மற்றும் நீர் நிலைகளில் மிதக்கும் தாவரங்களை அகற்றி, தூர்வாரும் பணிகளை பருவமழை காலத்திற்கு முன்னதாகவே விரைந்து முடிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளவும், முழுமையாக இப்பணிகளை முடிக்கக்கூடிய வகையில், தினமும் கண்காணித்து, பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அனைத்துத் துறை அலுவலர்களும் அளித்திடவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், அரசு முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!