Tamilnadu

“நியூயார்க் பங்குச் சந்தையில் தடம் பதித்த தமிழர்” : டெக் உலகில் வியக்க வைக்கும் சாதனை!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுதொடர்பான நிறுவனங்கள் பலவற்றின் தலைமையிடம். குறிப்பாக ஃபேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்ட உலகின் டாப் டெக்னாலஜி நிறுவனங்களின் கூடாரமாக திகழ்கிறது.

அந்தவகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரீஷ் மாத்ருபூதம், கலிஃபோர்னியாவில் தனது நிறுவனத்தைத் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பரவச் செய்வதற்காக ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

உலகின் மிக முக்கிய பங்குச் சந்தைகளில் ஒன்றாக கருதப்படும், நியூயார்க் பங்குச் சந்தையில் (நாஸ்டாக் குறியீடு) தன் நிறுவனத்தை பட்டியலிட்டு டெக் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கிரீஷ் மாத்ருபூதம்.

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரீஷ் மாத்ருபூதம். 46 வயதாகும் கிரீஷ், ஃப்ரெஷ்வொர்க்ஸ் இங்க் (Freshworks Inc) நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம்தான் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் முதல் இந்திய மென்பொருள் சேவை ஐ.டி நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் குறித்து பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஃப்ரெஷ்வொர்க்ஸ் பற்றி வெளியான சுவாரஸ்ய செய்திகள் பின்வருமாறு : “கிரீஷ் மற்றும் ஷான் இருவருமே சோஹோ நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபரில் சென்னையில் ஃப்ரெஷ்டெஸ்க் (Freshdesk) என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

க்ளவுடை மையமாகக் கொண்டு செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையமாக அந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது, வெறும் 6 ப்ரோகிராமர்களை மட்டும் கொண்டிருந்த அந்த நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளரே அட்வெல் கல்லூரி என்கிற ஆஸ்திரேலிய பள்ளிதான்.

அதனைத்தொடர்ந்து தனது வளர்ச்சி பாதையில் வேகமாக வரத்தொடங்கிய ஃப்ரெஷ்டெஸ்க் நிறுவனம், 200 நாட்களுக்குள் சிறிதும், பெரிதுமாக 200 வாடிக்கையாளர்களைப் பிடித்திருந்தது. மேலும் இதில் பல வெளிநாட்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களாக இடம்பிடித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து முதலீட்டுக்கு மேல் வளர்ச்சியைக் கண்ட ஃப்ரெஷ்டெஸ்க் நிறுவனம் 1 மில்லியன் டாலர் முதலீடு பெற்று சிறந்த நிறுவனமாக உருவானது. அதனைத் தொடர்ந்து, டைகர் குளோபல் என்கிற நிறுவனமும், ஆக்ஸல் நிறுவனமும் இணைந்து 5 மில்லியன் டாலர் முதலீடு செய்தனர்.

அந்த முதலீட்டை தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு 1CLICK.io, Konotor, Frilp போன்ற நிறுவனங்களை கையகப்படுத்தியது. பின்னர் 2017ல் ஃப்ரெஷ்டெஸ்க் நிறுவனம் ஃப்ரெஷ்வொர்க்ஸ் இங்க் என உருவானது. அடுத்து ஒரே ஆண்டில் 100 மில்லியன் டாலர் வருவாய் ஈடுப்படும் நிறுவனமாக உருவெடுத்தது.

மைக்ரோசாஃப்ட், ஆரக்கில், சேல்ஸ் ஃபோர்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போட்டு தன் தனித்த சிந்தனை மற்றும் பிரச்னைகளை வித்தியாசமாக அணுகி, எளிமையான தீர்வுகளை வழங்குவது போன்ற பல விஷயங்களால், எல்லோரையும் தாண்டி அசுர வளர்ச்சி கண்டது ஃப்ரெஷ்டெஸ்க்.

இதனால் வடிக்கையாளர் வருவாய் என அனைத்து தரப்பிலும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் தனது மதிப்பை உயர்த்தியது. இதன் மூலம் ‘எண்டர்பிரைஸ் டெக் யுனிகார்ன்’ என்ற அந்தஸ்தை பெற்றது ஃப்ரெஷ்வொர்க்ஸ். பெரும் முதலீட்டாளர்களிடம் பங்கு பெற்றுக்கொள்ள முதலீடு கோரிய ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் தனது பங்கை பொதுமக்கள் எடுத்துப் பயன்படுத்தும் வகையில், பொதுப்பங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் பங்குகளை அதன் ஊழியர்கள் பலரும் வைத்துள்ளதாகவும், இதனால் அங்கு பணியாற்றும் பலரும் கோடீஸ்வரர்களாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிரீஷ் மாத்ருபூதம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சியில் மிக சாதாரணமாக தொடங்கப்பட்டு இன்று நியூயார்க் பங்குச் சந்தையில் முதல் பங்கு வெளியீட்டுக்கு மணி அடித்து பங்கு வர்த்தகத்தை தொடங்கியது வரை.. இது என் கனவு நனவான தருணம். எங்கள் கனவை நம்பிய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், கூட்டாளிகள், முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாட்டில் இனிமேல் யானைகளை தனி நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது” : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!