Tamilnadu

பா.ஜ.க நிர்வாகி கொலைக்குக் காரணம் என்ன? - கொலையாளிகள் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

சிவகங்கை மாவட்ட பா.ஜ.க நிர்வாகி கொலைக்கான காரணத்தை குற்றவாளிகள் போலிஸாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் வைரம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் சிவகங்கை மாவட்ட பா.ஜ.க மீனவர் அணி துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

முத்துப்பாண்டி நேற்று முன் தினம் மாலை தன் வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் முத்துப்பாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

முத்துப்பாண்டி சுதாரித்து ஓடுவதற்குள் அவர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த முத்துப்பாண்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி உயிரிழந்தார். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து குற்றவாளிகளை உடனே பிடிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் முத்துப்பாண்டியை கொலை செய்த கொலையாளிகள் பால்பாண்டி, செல்வேந்திரன், சுகுமார் மூன்று பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.

2012ஆம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடைய செல்வம் என்பவரை முத்துப்பாண்டி வெட்டிக்கொலை செய்த வழக்கு உட்பட மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன.

செல்வத்தின் கொலைக்கு பழித்தீர்க்கவே அவரது உறவினர்களான மூவரும் முத்துப்பாண்டியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பழிக்குப் பழியாக நடைபெற்ற இந்தச் சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: டெல்லிவரை செல்வாக்கு இருக்கு.. மருத்துவ சீட்டு வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த பா.ஜ.க தம்பதி!