Tamilnadu

ATM மையங்களில் முதியவர்களைக் குறிவைத்து கொள்ளையடித்து வந்த மர்ம ஆசாமி.. போலிஸில் சிக்கியது எப்படி?

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலிஸாருக்கு புகார்கள் குவிந்துவந்தன.

இதையடுத்து போலிஸார் அந்த மர்ம நபரைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், புலியகுளம் தாமுநகர் பகுதியில் ஜெயராஜ் என்பவரிடம் கத்தியைக் காட்டி ரூபாய் ஆயிரம் மற்றும் ஏ.டி.எம் கார்டை ஒருவர் பறித்துச் சென்றதாக போலிஸாருக்கு புகார்வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் முகமது தம்பி என்பவரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம் மையங்களில் முதியவர்களை ஏமாற்றிய பணம் திருடிச் சென்றது இந்த மர்ம நபர் இவர்தான் என்பதும் தெரியவந்தது. மேலும் இவரிடமிருந்த பத்து ஏ.டி.எம் கார்டுகளையும் போலிஸார் பறிமுதல் செய்தனர்.

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த முகமது தம்பி, திருட்டுத் தொழிலையே பிரதானமாகச் செய்து வந்துள்ளார். ஆனால் தன் மீது எந்த சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருப்பதாக வெளி உலகத்திற்குக் காண்பித்து வந்துள்ளார்.

மேலும், சித்திரை, லாபம் ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும், குறும்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளதாக போலிஸ் விசாரணையில் முகமது தம்பி தெரிவித்துள்ளார்.

Also Read: “கார் ஓட்டிப் பழகியபோது விபத்து... புது மாப்பிள்ளை பலி” : பதறவைக்கும் சிசிடிவி காட்சி!