Tamilnadu

“சட்டசபைல பேசும்போது சரியான தகவலை தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க” : பழனிசாமியை சாடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“சட்டப்பேரவையில் பேசும்போது சரியான தகவலைத் தெரிந்துகொண்டு பேசினால் நன்றாக இருக்கும்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சாடியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது என்று சொன்னார். இதுசம்பந்தமாக நான் நிறைய முறை விளக்கிப் பேசியிருக்கிறேன்.

2011ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பிப்ரவரி மாதம் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற மகத்தான திட்டத்தின் அடிப்படையில் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கான நிர்வாகத் தேர்வு, இடம் தேர்வு, நிதி ஒப்படைப்பு போன்ற பல்வேறு விஷயங்களை அன்றைக்கே செய்தார்.

இந்தக் கல்லூரிகளையெல்லாம் எங்கள் ஆட்சியில் கொண்டுவந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வார்களே என்று ஏற்கெனவே நான் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன். அதையே மீண்டும் நேற்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிவு செய்தார்.

மேலும், ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற வீதத்தில், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு 1,650 மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அந்த மாணவர்களை இந்த ஆண்டே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி நான், துறையின் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்களுடன் டெல்லிக்குச் சென்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரையும், கல்வித்துறை அமைச்சரையும் இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமரைச் சந்தித்து இதுகுறித்துப் பேசியிருக்கிறார். அந்த வகையில் 11 மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இவற்றையெல்லாம் எதையுமே தெரிந்துகொள்ளாமல், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் 5,200 மாணவர்களின் மருத்துவக் கனவு வீணாய்ப் போனது என்று தவறான தகவலைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் பேசிய பேச்சின் நகலை வாங்கிப் பார்த்தேன். சட்டப்பேரவையில் பேசுகிறபோது அதுகுறித்து சரியான தகவலைத் தெரிந்துகொண்டு பேசினால் சரியாக இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இனிமேலாவது அதைச் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்” எனச் சாடியுள்ளார்.

Also Read: "சகோதரனாக உங்கள் கைகளைப் பற்றிக் கேட்டுக்கொள்கிறேன்” : மாணவ மாணவிகளிடம் முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள்!