Tamilnadu

“டேங்கர் லாரியில் இருந்து 20,000 லிட்டர் பெட்ரோல்-டீசல் திருட்டு”: சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

சென்னை, எண்ணூரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டேங்கர் லாரிகளில் அனுப்பப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக மாதவரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் டேங்கர் லாரிகளை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், எண்ணூர் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திலிருந்து டேங்கர் லாரி ஒன்று டி.நகர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது

அப்போது, அந்த லாரி அருகில் எடைமேடை பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் லாரியின் ஓட்டுநர் மற்ற இருவருடன் சேர்ந்து லாரியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடிக்கொண்டிருந்தனர்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் உடனே அவர்கள் மூன்று பேரையும் கையும் களவுமாகப் பிடிபட்டனர். பின்னர் ஓட்டுநர் ரவி, மணி, வினோத் ஆகிய மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் 10,000 லிட்டர் டீசல், 10,000 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Also Read: சுத்திகரிப்பு ஆலையின் குழாயில் துளையிட்டு பெட்ரோல், டீசல் திருட்டு - போலிஸிடம் சிக்கிய நில உரிமையாளர்!