Tamilnadu
முக்கிய சாட்சிகளிடம் 5 மணிநேரம் தீவிர விசாரணை: வெளியான பகீர் தகவல்கள்- விஸ்வரூபமெடுக்கும் கொடநாடு வழக்கு!
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணைக்கு இன்று கோவையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேரிடம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஒருவர் அனுபவ் ரவி என்பதும் மற்றொருவர் கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட கனகராஜின் நண்பர் குழந்தை வேலு என்பதும் தெரியவந்துள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மறு புலன் விசாரணை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில், உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 17ஆம் தேதி முக்கிய குற்றவாளியான சயானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மறைந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றவாளிகள் கேரளாவுக்கு தப்பிச்செல்ல உதவிய அப்போதைய கூடலூர் காவல்துறை ஆய்வாளர் வசந்தா, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சத்தியன், கொடநாடு கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன் உள்ளிட்ட பல முக்கிய நபர்களை தனிப்படை போலிஸார் 5 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை 12 மணி முதல் மாலை 5 மணி வரை உதகையில் உள்ள பழைய காவல் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், துணை கண்காணிப்பாளர்கள் சுரேஷ் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்டோர் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் அனுபவ் ரவி என்பவரையும் கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரும் உயிரிழந்த கனகராஜின் நண்பருமான குழந்தைவேலு ஆகியோரிடம் தனிப்படை போலிஸார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கனகராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்தும் அவர் இறக்கும்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்றும் இந்தக் கொள்ளைக்கும் முக்கிய அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரித்து பதிவு செய்துகொண்டுள்ளனர்.
விசாரணை நடத்தப்பட்ட குழந்தைவேலுவும், கனகராஜும் ஒரே அறையில் தங்கி சில ஆண்டுகள் வேலைசெய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க ஆட்சியின்போது அவர் விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறு புலன் விசாரணைக்கு தடை கோரி இவ்வழக்கின் அரசு சாட்சியாக இருக்கும் அ.தி.மு.கவை சேர்ந்த அனுபவ் ரவி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இரு நீதிமன்றங்களிலும் விசாரணை தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை போலிஸார் அனுபவ் ரவி விசாரணைக்கு வர சம்மன் அனுப்பி இன்று விசாரித்துள்ளனர்.
இதனிடையே கொடநாடு கணினிப் பொறியாளர் தினேஷ் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தினேஷ் தற்கொலை குறித்து தனிப்படை போலிஸார் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் தினேஷ் தற்கொலை குறித்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!