Tamilnadu

“தி.மு.க அரசிடம் இருந்து, ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” : ‘தினகரன்’ நாளேடு விமர்சனம்!

கடந்த 7 ஆண்டுகளாகவே பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, கார்ப்பரேட்களுக்கான அரசாகவே இருந்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிராக வேளாண் திருத்த சட்டம், ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரான அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது உள்ளிட்டவை, நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைய வைக்கும் திட்டங்களாகவே உள்ளன. மறுபுறம் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வால் விலைவாசி கடும் ஏற்றம் கண்டு மக்களின் குரல்வளையை நெரிக்கிறது.

மக்களுக்கு எதிரான இத்திட்டங்களை முன்னிறுத்தி வரும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு விதமான போராட்டங்களை நடத்த முன்வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். அந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறிய, ‘‘மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காத பாஜ அரசால் கூட்டாட்சி கொள்கை அழிக்கப்பட்டு வரும் இந்நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். நமது ஒற்றுமை வலிமையுடையதாக வளர வேண்டும்’’ என கூறி உள்ளார்.

எதிர்க்கட்சிகளை ‘‘ஒன்றிணைவோம் வா...’’ என்று அழைக்கும் ரீதியில் அமைந்துள்ள இந்த கருத்துக்கள், கூட்டணியின் பலத்தை முன்மொழிகின்றன என்பது மிகையல்ல. இதே ஒற்றுமை பலத்துடன் செயல்பட்டால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சிறப்பான மாற்றம் வருமென உறுதிபட கூறலாம். நாட்டு மக்களை மட்டுமல்ல... எதிர்க்கட்சியினரின் கருத்துக்களையும், அவர்களது வரலாற்றையும் நசுக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு உதாரணமாக, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட பேனரில், நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு படம் புறக்கணிக்கப்பட்டதை குறிப்பிடலாம்.

இதுதொடர்பாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் எழுதிய கட்டுரையில், ‘‘இது அரசியல் பழி வாங்கும் செயல். அவரது தொலைநோக்கு பார்வையில் உருவான பொதுச்சொத்துக்களை விற்றுத்தான் இழந்த பொருளாதாரத்தை மீட்கும் வழியை நீங்கள் தேடுகின்றீர்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கான இலவச புத்தக பைகளில் முன்னாள் முதல்வர்களின் படத்தை நீக்க வேண்டாமென உத்தரவிட்டுள்ளார். அந்த அரசியல் முதிர்ச்சி உங்களிடம் இல்லை’’ என கூறியிருக்கிறார்.

யாருக்காக ஒரு ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு, நேற்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்த ஒரு சட்ட முன்வடிவை உதாரணமாக கூறலாம். கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நேரத்தில் நீண்ட நேரம் நிற்கின்றனர். இதனால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, அவர்களுக்கு இருக்கை வசதி வழங்க வேண்டும் என்பதுதான் அது. இதுபோன்று எளிய மக்கள், தொழிலாளர்களின் நலன் கருதி செயல்படும் திமுக அரசிடம் இருந்து, ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.