Tamilnadu
ஹெல்மெட் அணிந்து கொள்ளை.. ‘டாட்டூ’ மூலம் மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்.. கூவத்தில் குதித்து அமுக்கிய போலிஸ்!
சென்னையில் மருந்துக்கடையை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்களை, கையில் போட்டிருந்த ‘டாட்டூ’வை வைத்து அடையாளம் கண்ட போலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்துகொண்டு நுழைந்த 2 கொள்ளையர்கள் ரூ. 1.50 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்தனர்.
மறுநாள் காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததைக் கண்ட கடை உரிமையாளர் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலிஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து, கொள்ளையர்களை கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட் தலைமையிலான தனிப்படை போலிஸார் தீவிரமாக தேடி வந்தனர். சிசிடிவி காட்சியை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லாததால் கொள்ளையர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளில் கொள்ளையன் ஒருவரின் வலது கையில் ‘டாட்டூ போட்டிருந்தது தெரிந்தது.
இதனால் அந்த கொள்ளையரின் கை அடையாளத்தை பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களோடு ஒப்பிட்டு பார்த்தனர். அதில், போண்டா ராஜேஷ் என்ற குற்றவாளியின் கையில் அந்த டாட்டூ இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொள்ளையர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த போலிஸார் அங்கு சென்று தேடினர். அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்களான போண்டா ராஜேஷ், பிக்சோ விஜயகுமார் இருவரும் போலிஸாரை கண்டதும் கூவம் ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.
ஆனால் தனிப்படை போலிஸாரும் ஆற்றில் குதித்து 2 கொள்ளையர்களையும் மடக்கி கைது செய்தனர். பின்னர் அவர்களை குளிக்க வைத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்கள் மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விஜயகுமார் மற்றும் ராஜேஷ் ஆகியோரிடமிருந்து ரூபாய் 55,000 ரொக்கம் மற்றும் 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் விசாரணையில் வலி நிவாரண மாத்திரைகளை 2 கொள்ளையர்களும் போதை மாத்திரைகளாக உட்கொண்டு வந்ததாகவும், அந்த மாத்திரைகளை வாங்குவதற்காகவே கடையை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்தாகவும் 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைதான 2 பேரையும் கீழ்ப்பாக்கம் போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ‘டாட்டூ’வை வைத்து ஒரே நாளில் கொள்ளையர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!