Tamilnadu

“குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிப்பில் இருக்கிறான்” : கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தையின் தந்தை பேட்டி!

செஞ்சி அருகே பெற்ற குழந்தையை தாய் கொடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவரது தாய் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலிஸார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்த தாய் துளசியை அதிரடியாக கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலப்பாடி மதுரா - மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தை சேர்ந்த துளசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று கோகுல் வயது மற்றும் பிரதீப் வயது இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடிபிரச்சினை ஏற்படும் என கூறப்படுகிறது. பிரச்சனை காரணமாக கடந்த பிப்ரவரி 23ம் தேதி வீட்டில் கணவன் இல்லாத நேரத்தில் துளசி தனது இளைய மகன் பிரதீப்பை கடுமையாகத் கையால் தாக்கியதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதில் காயமடைந்த குழந்தை பிரதீப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது தனது தந்தையுடன் இருந்து வருகிறார். மேலும் துளசி கணவரை பிரிந்து தனது தாய் வீடான ஆந்திரா மாநிலம் ராம்பள்ளி கிராமத்திற்குசென்று விட்டார்.

இதனிடையே தற்போது குழந்தையை தாய்மையை மறந்து மிருகத்தனமாக துளசி தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குழந்தையின் தந்தை வடிவழகன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து தாய் துளசி மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிஸார் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் தங்ககுருநாதன் மற்றும் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தாயை துளசியை கைது செய்ய ஆந்திராமாநிலம் ராம் பள்ளி கிராமத்திற்கு போலிஸார் சென்றனர்.

இதுகுறித்து பேசிய குழந்தையின் தந்தை வடிவழகன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துளசியுடன் திருமணம் நடைபெற்றதாகவும், சென்னையில் மூன்று ஆண்டுகள் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக மோட்டூர் கிராமத்தில் வந்து வசித்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் குழந்தை பிரதீப் குறைப்பிரசவத்தில் பிறந்ததாகவும் அதனால் சற்று பலன் குறைந்து காணப்பட்டதாகவும் கூறும் வடிவழகன் குழந்தைக்கு அடிக்கடி காயம் ஏற்படும்போது மனைவி துளசியிடம் கேட்ட போது குழந்தைக்கு போதிய சத்து இல்லாததால் அடிக்கடி கீழே விழுந்து விடுவதால் காயம் ஏற்பட்டதாகவும் பொய் கூறி உள்ளார்.

தற்போது மனைவி துளசி பிரிந்து அவருடைய அம்மா வீட்டில் ஆந்திராவில் வசித்து வருவதாகவும், குழந்தையை துளசி கொடூரமாக தாக்கிய வீடியோ பதிவு செய்துள்ளது தற்போது தான் எனக்கு தெரிய வந்ததாகவும் இதனையடுத்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குழந்தையை தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் என்னுடைய பராமரிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சென்ற தனிப்படை போலிஸார் துளசியை அங்கு அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள துளசி விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.

Also Read: ரூ.625 கோடி மதிப்பில் 8905 புதிய மின்மாற்றிகள்.. முதற்கட்ட பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!