Tamilnadu

“நானே போகலனா பொதுமக்கள் எப்படி போவாங்க?” : அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மகிழ்ச்சி!

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்ட நிகழ்வு பலருக்கும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ (29). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்று, கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றிவருகிறார்.

தர்மலாஸ்ரீக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு தாமரைக்கண்ணன் என்ற மருத்துவருடன் திருமணம் நடந்தது. இதையடுத்து, நிறைமாத கர்ப்பிணியான தர்மலாஸ்ரீ, தலைப்பிரசவத்திற்காக சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 18 இரவு அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அன்றிரவே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சேலம் அரசு மருத்துவமனையில் தனக்கு சிறப்பான மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தர்மலாஸ்ரீ மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்ட நிகழ்வு பலருக்கும் வியப்பை அளித்ததோடு, அரசு மருத்துவமனை மீதான நம்பகத்தன்மையையும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தர்மலாஸ்ரீ, "கருவுற்ற நேரத்தில் தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால் அரசு மருத்துவமனையிலேயே தரமான சிகிச்சை கிடைப்பதை உணர்ந்து மகப்பேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்தான் சேர வேண்டும் என்று குடும்பத்தாருடன் கலந்துபேசி முடிவு எடுத்தேன்.

அரசு மருத்துவமனை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே வரவேண்டும் என்ற நோக்கில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு சேர்ந்தேன். ஆனால் அது இவ்வளவு வைரலாக பரவும் என்று எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பீட்சா விற்கும் முன்னாள் அமைச்சர்” : வைரலாகும் படங்கள்... அவர் சொன்ன ஆச்சர்ய காரணம்?