Tamilnadu

"ஆதாரம் இருந்தா சொல்லுங்க... நாங்கள் மாற்றத் தயார்" : செல்லூர் ராஜூவுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது அ.தி.மு.க உறுப்பினர் செல்லூர் ராஜூ, "மதுரையில் பென்னி குயிக் வாழ்ந்த இல்லத்தில் கலைஞர் பெயரில் நூலகம் அமையவிருப்பதாகத் தகவல்கள் வருகிறது" எனப் பேசினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளார். நீங்கள் சொல்வதற்கான ஆதாரம் இருந்தால், நிச்சயம் இந்த அரசு கேட்கும். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆதாரம் இல்லாமல் ஒரு தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. பேரவையில் இது பதிவாகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தைச் செல்கிறேன். பென்னி குயிக் வாழ்ந்த இல்லம் என உறுப்பினர் கூறுகிறார். நீங்கள் முன்னாள் அமைச்சராக இருந்தவர். மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளீர்கள். இப்படிச் சொல்வது உங்களது தன்மையைக் குறைப்பதாக உள்ளது" எனப் பேசினார்.

முன்னதாக பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல தியாகராஜன்,"அந்த இல்லம், பென்னி குயிக்கின் இல்லம் அல்ல. பென்னி குயிக் மரணம் அடைந்த வருடம் 1911. அந்த இல்லம் கட்டப்பட்டது 1912-ல் இருந்து 1915 வரை. எனவே, அந்த இல்லம் பென்னிகுயிக் இல்லமாகவே இருந்திருக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

Also Read: நாட்டிலேயே வட்டியில்லா விவசாயக் கடன் கொடுத்த பிதாமகன் தலைவர் கலைஞர் - அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்!