Tamilnadu
“கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முன்னர் முறையாக விசாரிக்கப்படவில்லை” : ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்!
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர் மரணம், சிலர் விபத்துக்குள்ளானது போன்ற விஷயங்கள் முன்னர் முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும் தற்போது முழுமையாக விசாரிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமென்ற நோக்கில், விசாரணையை விரிவுபடுத்துவதற்காக நீலகிரி நீதிமன்றத்தில் காவல்துறை மெமோ தாக்கல் செய்யபட்டதாகவும், அது நிராகரிக்கபடவில்லை என்றும் தெரிவித்தார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டுமென நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படுபவை என சுட்டிக்காட்டினார். மனுதாரர் அனுபவ் ரவி காவல்துறை சாட்சியம் மட்டுமல்ல, வழக்கில் குற்றம்சாட்டபட்டவர்களுடன் நெருக்கமானவர் எனவும் சுட்டிக்காட்டினார்.
காவல்துறை விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில் தான் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதை பொறுத்து நீதிமன்றம் தான் முடிவெடுக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டினார். வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர் மரணம், சிலர் விபத்துக்குள்ளானது போன்ற விஷயங்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும் தற்போது முழுமையாக விசாரிக்கப்படுகிறது எனவும் விளக்கம் அளித்தார்.
அந்த விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகி விளக்கம் அளிக்காமல், நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், வேண்டுமானால் அவரது வழக்கறிஞர் துணையுடன் காவல் நிலையத்தில் ரவி ஆஜராகலாம் என்றும் விளக்கம் அளித்தார். கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளரான நிறுவனத்தின் இயக்குனரையும் இதுவரை விசாரிக்கவில்லை என குறிப்பிட்டார்.
அரசு தலைமை வழக்கறிஞர், தேவையில்லாமல் யாரையும் துன்புறுத்த வேண்டுமென நோக்கம் இல்லை என தெரிவித்ததுடன், விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை முடிக்க 8 வார கால அவகாசம் தேவைப்படும் என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமைக்கு ((ஆகஸ்ட் 27)) தள்ளிவைத்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!