Tamilnadu

மக்களே உஷார்.. “கொரோனா தடுப்பூசி போட வந்துருக்கேன்” - சிறுவர்களை ஏமாற்றி சென்னையில் நடந்த கொள்ளை சம்பவம்!

சென்னை அடுத்த திருமுல்லைவாயல், வேங்கடேச பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி புஷ்பலதா. இந்த தம்பதிக்கு மணிகண்டன், மோனிஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை லோகநாதன் மற்றும் புஷ்பலதா ஆகியோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் சிறுவர்கள் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்போது, வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் உங்களது பெற்றோர் தடுப்பூசி போட்டு விட்டார்களா என்றும், எங்கள் ஆதார் அட்டையை காட்டுங்கள் என கேட்டுள்ளார்.

இதனால் சிறுவர்கள் அவரை வீட்டிற்குள் அழைத்து ஆதார் கார்டை எடுத்துக் காண்பித்துள்ளனர். அப்போது, திடீரென அந்த மர்ம நபர் வீட்டிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு, சிறுவர்களை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர் சிறுவர்கள் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர். இது குறித்து சிறுவர்கள் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்தனர். பிறகு வீட்டிற்கு வந்த பார்த்த போது நான்கு சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து லோகநாதன் திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Also Read: ”கடத்தலுக்கு முன்.. கடத்தலுக்கு பின்” : கொள்ளையர்களைக் கைது குறித்து திருப்பூர் எஸ்.பி வெளியிட்ட மீம்ஸ் !