Tamilnadu

ரயில் பாதையோரம் கத்தை கத்தையாக ₹2000 நோட்டுகள்; விசாரிக்கச் சென்ற போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்கா தொப்பூர் அருகே உள்ள குண்டுக்கல் ரயில் தடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக போலியான 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கத்தை கத்தையாக வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் 2000, 500 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி விசாரணை.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் சேலம் பெங்களூரு ரயில் தடம் உள்ளது. இந்த ரயில் தடத்தில் பெங்களூரு முதல் காரைக்கால் வரை பயணிகள் ரயில் சென்று வருகிறது. இந்த ரயிலில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் காடையாம்பட்டி அருகே தொப்பூர் அருகே உள்ள குண்டுக்கல் கிராமம் வனப்பகுதி ஓட்டியுள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கட்டுக்கட்டாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடப்பதாக தர்மபுரி ரயில்வே போலீசாருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி ரயில்வே போலீசார், அங்கு கீழே கிடந்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர் அப்போது அங்கு கொட்டப்பட்டு கிடந்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பொம்மை நோட்டுகள் எனவும் இந்த நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காக விற்பனை செய்யப்படும் நோட்டுகள் எனவும் தெரிய வந்தது இதைத்தொடர்ந்து இந்த பொம்மை நோட்டுகளை ரயில்வே தடம் ஓரமாக கட்டுக்கட்டாக வீசி சென்றவர்கள் யார் என தர்மபுரி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “மன்னிப்புக் கடிதத்திற்கு பெயர்போன புரட்சிகர தலைவர் யார்?” : பா.ஜ.கவுக்கு விபூதியடித்த மேற்கு வங்கம்!