Tamilnadu
தமிழ்நாட்டில் MPக்கள் எண்ணிக்கையை குறைத்த ஒன்றிய அரசு; ரூ.5,600 கோடி இழப்பீடு வழங்குக - ஐகோர்ட் அதிரடி!
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு ஏன் ரூ.5,600 கோடி இழப்பீடு வழங்கக் கூடாது என ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தென்காசி நீண்ட காலமாக தனி தொகுதியாக இருப்பதால் அதை பொது தொகுதியாக மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டு எம்.பி.,க்களின் எண்ணிக்கையை 39 ஆக குறைத்ததன் மூலம் மாநிலத்தின் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
1967-ம் ஆண்டு முதல் நடந்த 14 மக்களவைக்கான தேர்தல்களில் தலா 2 எம்.பி.க்கள் வீதம் மொத்தம் 28 எம்.பி.க்கள் தமிழ்நாட்டிற்கு கிடைக்காமல் போய்விட்டனர் என்றும் இதனால் மாநில உரிமை மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களை தமிழ்நாடு இழந்துள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறையை காரணம் காட்டி எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைத்தால் அது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல். அதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். ஒரு எம்.பி. மூலமாக மாநிலத்துக்கு 5 ஆண்டுகளில் நலத்திட்ட பணிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றால், கடந்த 14 தேர்தல்களில் 2 எம்.பி.க்களை இழந்துள்ள தமிழ்நாட்டிற்கு இழப்பீடாக 5 ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஏன் வழங்கக்கூடாது என அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்க ஏன் தடை விதிக்கக்கூடாது என்றும் நீதிபதி வினவினார். லோக்சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைத்தால் அதற்கு பதிலாக ராஜ்யசபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை ஏன் உயர்த்தக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இதற்கு ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Also Read
-
“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழ்நாடு அரசின் முடிவால் செவிலியர்கள் மகிழ்ச்சி!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!