Tamilnadu

அடுத்த வருடம் வரை சென்னை மக்களுக்கு கவலை இல்லை... நீர்நிலைகளில் வெகுவாக அதிகரித்துள்ள இருப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டில் மிகப்பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை உருவானது.

கடந்த 2 ஆண்டுகளாக மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை. இந்நிலையில், அடுத்த 8 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரிகளில் 37.2% நீர் நிரம்பியிருந்த நிலையில் இந்தாண்டு ஆகஸ்டில் 72% ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் போதிய அளவு தண்ணீர் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். இதில் 2,491 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

புழல் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 3,330 கன அடி. அங்கு 2,613 கன அடி தண்ணீர் உள்ளது.

சோழவரம் நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 1,081 கன அடி. அங்கு 612 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

இதேபோன்று பூண்டி நீர் தேக்கத்தில் 2,256 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அதன் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி ஆகும்.

தேர்வாய்கண்டிகையின் முழு கொள்ளளவு 500 கன அடி ஆகும். அங்கு 486 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

இதன் மூலம் அடுத்த 8 மாதங்களுக்கு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீர் இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான 1.75 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் போதிய தண்ணீர் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சென்னை மாநகருக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் 650 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த அளவு 903 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: “தவிக்கும் வாய்க்கு தண்ணீர் வழங்கும் திட்டங்களில் கூட கொள்ளையடிக்கத் துடிப்பதா?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!