Tamilnadu

“அ.தி.மு.க சேர்மன் முறைகேடு” : சொந்தக் கட்சி கவுன்சிலர்களே தர்ணாவில் ஈடுபடும் கொடுமை!

உத்தமபாளையம் அ.தி.மு.க ஒன்றியக் குழுத் தலைவரின் முறைகேட்டை கண்டித்து அ.தி.மு.க, தி.மு.க கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 7 அ.தி.மு.க கவுன்சிலர்கள், 2 தி.மு.க கவுன்சிலர்கள், 1 அ.ம.மு.க கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன் உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஜான்சி வாஞ்சிநாதன் தலைமையில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் வந்தனர்.

காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை காத்திருந்த கவுன்சிலர்கள் ஒன்றியக் குழு தலைவர் வராததால் கூட்டத்தை நடத்த அதிகாரிகள் துணைத் தலைவரை அழைத்தனர், ஆனால் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், பல முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டி கூட்டத்தை நடத்த மறுத்தனர்.

மேலும் ஒன்றிய தலைவருக்குப் பதிலாக அவரது கணவர் வாஞ்சிநாதன் தலைவர் போல செயல்படுவதாகவும், எந்தவிதமாக தகவலையும் கவுன்சிலருக்கோ, அதிகாரிகளுக்கோ தெரிவிப்பதில்லை என்றும் கவுன்சில் கூட்டம் நடத்தி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து, பல லட்ச ரூபாய் அரசு நிதியில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிற்கு முன்பு தரையில் அமர்ந்து கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒன்றியக் குழு தலைவருக்கு எதிராக அ.தி.மு.க கவுன்சிலர்களும் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நெடுங்குளத்தில் தப்பித்த பழனிசாமி... கொடநாடு வழக்கில் சிறை உறுதி : எடப்பாடியின் ‘பகீர்’ கொலை பின்னணி!