Tamilnadu
“மனைவியுடன் தகராறு” - மாமனாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி... காப்பாற்ற வந்த இளைஞர் பரிதாப பலி!
குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த டிரைவர், மனைவி குடும்பத்தினரை லாரி ஏற்றி கொல்ல முயன்றபோது, தடுக்க முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சோளம்பள்ளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32). லாரி டிரைவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் ஜீவிதாவிற்கும் சரவணனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனை விட்டு தனது தாய் வீட்டிற்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சென்றுள்ளார் ஜீவிதா. தொடர்ந்து பல முறை அழைத்தும் சரவணனுடன் சேர்ந்து வாழ மறுப்புத் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகின்றது.
சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு மாமானார் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோன்று நேற்று தனது மாமனார் வீட்டிற்கு சென்ற சரவணன், தனது மனைவி ஜீவிதாவை தன்னுடன் வரச் சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஜீவிதாவின் தந்தை குப்பன் அருகே சென்று சரவணனை கண்டித்துள்ளார். குப்பன் கண்டித்ததால், கோபமடைந்த சரவணன் தனது லாரியை எடுத்து வந்து மாமனார் மீது ஏற்றிக் கொள்ள முயற்சித்துள்ளார்.
அப்போது வேகமாக வந்த லாரியை பார்த்த குப்பனின் சகோதரி மகன் ஜீவானந்தம் (26) தனது மாமா குப்பன் மீது லாரி மோதிவிடாமல், அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது ஜீவானந்தத்தின் மீது லாரி ஏறியது.
லாரி ஏறியதில் படுகாயமடைந்த ஜீவானந்தத்தை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும்போது வழியிலேயே ஜீவானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே லாரியை ஏற்றி கொலை செய்த சரவணனை, மடக்கிப் பிடித்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சரவணன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!