Tamilnadu
பனை மரங்களை வெட்ட தடை: பனைத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேளாண் பட்ஜெட் - சிறப்பு அம்சங்கள் என்ன?
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசினார்.
அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு : -
“பனை மரங்களைப் பாதுகாப்பதுடன் கூடுதல் மரங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும் 1 லட்சம் பனங் கன்றுகளையும் முழு மானியத் தொகையுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏரிக் கரைகளிலும் சாலையோரங்களிலும் பனைமரங்களை வளர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் எடுக்கப்படும். இன்று மக்கள் அதிகம் விரும்பும் பொருட்களாக பனங்கற்கண்டு, பதநீர், கருப்பட்டி போன்றவை விளங்குகின்றன. அவற்றைக் கலப்படமில்லாமல் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தால் மிகுந்த வரவேற்பைப் பெறும். இத்துறை பனைமரங்களைப் போற்றிக் காக்கும் உன்னதப் பணியை உன்னிப்பாக மேற்கொள்ளும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பனை வெல்லம் உற்பத்தி தொடர்பான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தரமான பனை வெல்லம் தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய பயிற்சியும், பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்திட மானியமும் வழங்கப்படும்.
மேலும், பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மதிப்புக் கூட்டுப்பொருளான பனை வெல்லத்தினைப் பனை வாரியம், வேளாண் கூட்டுறவு சங்கங்களுடன் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும், ஒன்றுபட்டு, மழை ஈர்ப்பு மையம், நீர் நிலைகளின் காவலன் என்றும் அழைக்கப்படும் பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினைத் தடுக்க இவ்வரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கம் 3 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!