Tamilnadu

விவசாயிகளுக்கான அரசு... தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை - இந்திய ஒன்றியத்தின் ’முன்னத்தி ஏர்’!

1957ஆம் ஆண்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக குளித்தலையில் இருந்து வென்று, பேரவைக்குள் நுழைந்த முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் பேச்சு, நங்கவரம் பண்ணை விவசாயிகளின் ‘கையேரு வாரம் - மாட்டேரு வாரம்’ பிரச்சனையை பற்றியது தான் என்பது வரலாறு. அவரது வழிவந்த இன்றைய முதலமைச்சர், வேளாண் பெருங்குடி மக்கள் மீதான நேசப்பெருக்கோடு விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற ஒப்பற்ற முன்னெடுப்பை துவங்கியிருக்கிறார்.

விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பி நம் தாய் தமிழகத்தில் சுமார் 70 சதவீதம் பேர் வாழ்கின்றனர். வற்றாத நம்பிக்கையாளர்களான அவர்களது வாழ்வில் புதிய ஒளிச்சுடரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு ஏற்றி வைத்திருக்கிறது. இது விவசாய பணிகளில் முக்கிய பங்காற்றும் 60 சதவீத பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இந்தியாவின் முதுகெலும்பு என்ன என்றால்? கேள்வி ஓசை அடங்குவதற்குள் ’விவசாயம்’ என்ற பதில் எட்டுத்திசைகளில் இருந்தும் கேட்கும். ஆனால், அது ‘ஏட்டுச்சுரைக்காயாய்’ இருக்கிறதே தவிர வேறில்லை. ’எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் நிலையான பொருளாதாரம் வேண்டும்’ என கருத்துச் சொல்லும் வல்லுநர்கள் கூட, பெரியதாக கவனம் செலுத்தாத துறையும் விவசாயமே. ஆனால், நம் நாட்டின் முதுகெலும்பு அதன் வலுவை இழந்து விடக்கூடாது என்கிற அக்கறை, யாருக்கெல்லாம் உண்டோ? இல்லையோ? அகண்ட காவிரி பாயும் தஞ்சை டெல்டாவின் ஒரு பகுதியை பூர்வீகமாக கொண்ட நம் முதலமைச்சருக்கு நிறையவே இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் விவசாயத்திற்கென்று தனித்த நிதி நிலை அறிக்கை.

விவசாயிகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அழிவுக்கான சட்டங்களையும் கொள்கைகளையும் தான்தோன்றித்தனமாக உருவாக்கி, திணிக்க முயலும் ஒன்றிய அரசின் அராஜகம் தொடரும் சூழலில், அதை அன்றும் இன்றும் என்றும் எதிர்ப்பவர் நம் முதலமைச்சர். அவரது தலைமையிலான அரசு விவசாயத்திற்கு இந்தளவு கொடுக்கும் முக்கியத்துவம் 1970களில் பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட மாற்றத்தை விட நிச்சயம் வீரியமானதாக இருக்கும்.

இந்திய விவசாயிகள் கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனில் சாகிறார்கள் என்று 1928-ல் பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்ட ராயல் கமிஷனின் அறிக்கை வெளிப்படுத்தியது. இந்த நிலையை தமிழகத்தில் போக்க எத்தனையோ முத்தான நடவடிக்கைகளை எடுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். விவசாயத்திற்கு இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், உழவர் சந்தைகள், மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.

இந்திய நாட்டின் உணவு உற்பத்திக்கு தமிழகத்தின் பங்கு அளப்பரியது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் 70 சதவீதமானது, வேளாண்மையையும் அது தொடர்பான தொழில்களையும் சார்ந்தே உள்ளது. சுமார் 80 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் விளைநிலமாக இருக்கிறது. ஆனாலும் தொலைநோக்கு திட்டமில்லாதவர்களின் கைகளில் ஆட்சி இருந்ததால், பல்வேறு பிரச்சனைகளாலும், சிக்கல்களாலும் சூழப்பட்டு, தங்களின் சுயேட்சையான பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் விவசாயிகள் உள்ளனர். ஆட்சிக்கு வந்ததன் மூலம் அவர்களை ஆசுவாசப்படுத்தியிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனி நிதிநிலை அறிக்கை மூலம் மறுவாழ்வு கொடுக்கப்போகிறார்.

தலைநகரில் அமர்ந்துகொண்டு, தாக்கீதுகள் விடுத்து கருத்துகளை கேட்காமல், மாவட்டம் மாவட்டமாகச் சென்று, வேளாண் துறையில் உற்பத்தி, மதிப்புக்கூட்டு , ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புழங்கும் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துபேசி, சேகரிக்கப்பட்ட தகவல்களை அலசி ஆராய்ந்து, முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு இந்த நிதிநிலை அறிக்கை தயாராகியுள்ளது இந்திய துணைக்கண்டத்தில் முற்போக்கான எந்தவொரு மாறுதலுக்கும் தமிழ்நாடே முன்மாதிரியாக இருந்து வருகிறது. இனிவரும் காலங்களில் வேளாண் துறையிலும் தமிழகமே ஒன்றியத்திற்கு முன்னத்தி ஏர்..!

Also Read: பதவியேற்று 99 நாளில் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைப்பு... நிறைவேறிய தேர்தல் வாக்குறுதி!