Tamilnadu

“அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள்; மீனவர் நலனுக்காக ரூ.1149 கோடி ஒதுக்கீடு”: பட்ஜெட்டில் அறிவிப்பு!

2021 - 2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட் உரையை வாசித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீனவர் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், “தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும்; இதற்காக ரூ.433 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். கடல் பாசி வளர்ப்பு மீன் வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட மாற்று வாழ்வாதாரம் திட்டங்களும் ஊக்குவிக்கப்படும். மீனவர் நலனுக்காக ரூ. 1,149 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும். மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும். தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ.6,607 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேட்டூர், வைகை, அமராவதி, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க அளவு உயர்த்தப்படும். கல்லணை கால்வாய் புதுப்பித்தல், விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இருந்து 2639.15 கோடி நிதி உதவி பெறப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர்த்தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.” என அறிவித்துள்ளார்.

Also Read: பட்ஜெட் தாக்கல்: தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80 கோடி.. தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு! #TNBudget