Tamilnadu
வேலையைக் காட்டும் மோடி அரசு... மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு!?
தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து முதுநிலை பட்டப் படிப்பு, சிறப்புப் படிப்புகளுக்கும் ஒன்றிய அரசே பொது கலந்தாய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிகக ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரம் இடங்களில், 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் அளிக்கப்படுகின்றன.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த இடங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு இடம் கூட வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்தது.
இதனை எதிர்த்து தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு, மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில், இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். அதில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதற்காக ஒரு குழு அமைத்து, மூன்று மாதங்களில் செயல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. ஆனால், ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலே நீட் தேர்வு நடைபெறும் என்று கடந்த ஜூலை 12 ஆம் தேதி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் காரணமாக தற்போது ஒன்றிய அரசு, அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும் முதுநிலை, இளநிலை மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
பா.ஜ.க அரசால் திணிக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நடப்புக் கல்வி ஆண்டிலேயே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து முதுநிலை பட்டப் படிப்பு, சிறப்புப் படிப்புகளுக்கும் ஒன்றிய அரசே பொது கலந்தாய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிகக ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புக்கான 100 விழுக்காடு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்த வேண்டும். இதில் ஒன்றிய சுகாதாரத் துறையே கலந்தாய்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பா.ஜ.க அரசு, கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளை தொடர்ந்து பறிப்பதை அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!