Tamilnadu

வரி வசூலிக்காதோருக்கு தாமதமாக சம்பளம் போட்டால் ஏற்பார்களா? சொகுசு கார் வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி!

வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன.

இதில் சில வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வணிக வரித்துறை அதிகாரி ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களுக்கு ஏராளமானோர் நுழைவு வரி செலுத்தாமல், உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அப்படி எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்த பெண் அதிகாரி, ஆலந்தூர் உதவி ஆணையர் அதிகாரத்துக்கு உட்பட்டதில் 2 வழக்குகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம், பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கிக் கொண்டு நுழைவு வரியை செலுத்தாமல், வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டபோதும், வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சாடினார். தமிழ்நாடு நிதி அமைச்சர் கூட வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அதிகாரிகள் ஒழுங்காக வரியை வசூலிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

வரியை வசூலிக்காமல் இழுத்து அடித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டதன்படி, எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது? வணிக வரித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு காலதாமதமாக வருவாய் வருகிறது.

ஆனால் அதிகாரிகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் வழங்குகிறது. சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? வரி வசூலிக்கும் பணியில் உள்ள அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து, வெள்ளிக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 13) சொகுசு கார் நுழைவு வரி தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் எண்களை வணிக வரித்துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த வழக்குகள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Also Read: தகுதி பெற்றும் பெண் என்பதால் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? : ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை !