Tamilnadu

”அடுத்து நாமதான்..” : அடுத்தடுத்து சிக்கி வரும் முன்னாள் அமைச்சர்களால் பீதியில் அ.தி.மு.க புள்ளிகள்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்களின் இடங்கள் என சென்னை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் 52 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் முக்கியமான ஆவணங்களும், நகை, பணம் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து குவித்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் விசாரணை தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்தான் தற்போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சராக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், உறவினர் சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழலில் திளைத்த முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து ரெய்டில் சிக்கி வருவதால் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பீதியில் இருந்து வருகின்றனர்.

Also Read: சிக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!