Tamilnadu

மீரா மிதுன் விரைவில் கைது? : பட்டியலின மக்களை இழிவுபடுத்திப் பேசியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

பிக்பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் மீரா மிதுன். இவர் தன்னை பிரபலமாகக் காட்டிக் கொள்வதற்கான நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தனது சமூக வலைதளத்தில் சர்ச்சையாகப் பேசுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார்.

இவரது இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்றைய தினம் விசிக நிர்வாகி வன்னி அரசு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “மீரா மிதுன் என்ற திரைப்பட நடிகை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவை பார்த்தேன். அதில் தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேவலமாக திட்டி, என்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தையே மிக கேவலமாகவும் மோசமான வார்த்தைகளாலும் திட்டியது மட்டுமல்லாமல் திரைப்பட துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

இது பொதுவாக தாழ்த்தப்பட்டோரை கேவலப்படுத்தும் ஆதிக்க சாதியினரின் தூண்டுதல் பேரில் அதே மன நிலையை பிரதிபலித்து தாழ்த்தப்பட்ட மக்களை கேவலமாக பேசி வீடியோ பதிவிட்ட மீரா மிதுன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலிஸார், 32/2021 U/s 153,153A(1) (a),505 (1) (b),505 (2) IPC and section 3(1) (r),3(1)(s), (3)(1) (u) of sc &ST Prevention Act 1989-ன் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் படி வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம் விரைவில் மீரா மிதுன் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: “நாடாளுமன்றத்தை முடக்கிய குற்றவாளியே மோடிதான்.. இந்த அரசு நீடிக்கக்கூடாது” : கொந்தளிக்கும் திருப்பூர் MP!