Tamilnadu

அம்பலப்பட்ட ‘தினமலர்’... கொங்கு நாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒன்றிய அமைச்சர்!

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் வகையில் எந்தக் கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்ற எல்.முருகன் பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம்பெற்றது. இதை வைத்து செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகை, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து, அதை யூனியன் பிரதேசமாக அறிவிக்க திட்டமிடப்படுவதாக உள்நோக்கத்தோடு செய்தி பரப்பியது.

இதற்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு தரப்பினரும் ஒன்றிய அரசுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பின் அதை கைவிட வேண்டும், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என எச்சரித்து வந்தனர்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, தடுப்பூசி பற்றாக்குறை போன்ற விவகாரங்களில் மக்களை திசைதிருப்ப மோடி கும்பலும், சங் பரிவாரத்தினரும் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தி இது எனப் பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக எம்.பி.,க்கள் பாரிவேந்தர் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில், “தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க எந்தக் கோரிக்கையம் வரவில்லை. அதுபோல், எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சரின் இந்த விளக்கத்தின் மூலம் தினமலர் உள்ளிட்ட பிரிவினைவாத கும்பல் கிளப்பிய அவசியமற்ற கொங்கு நாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: “வரலாற்றை செயற்கையாக உருவாக்க முடியாது” : 'கொங்கு நாடு' விவகாரம் குறித்து ஆய்வாளர் ராஜன் குறை கட்டுரை!