Tamilnadu
மனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு மற்றொரு திருமணம்... கரூரில் ஒரு ‘கல்யாண’ராமன்!
தனியார் வங்கி ஊழியர் ஒருவர் பெற்றோர் உதவியுடன் 3 திருமணங்கள் செய்து நகை மற்றும் பணம் பறித்து வாழ்ந்த நிலையில் முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெங்கமேடு வி.வி.ஜி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (35) தனியார் வங்கியில் காசாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், பொள்ளாச்சியை சேர்ந்த ஜோதி முருகேஸ்வரி (30) என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பிரசவத்திற்காக ஜோதி முருகேஸ்வரி தாய் வீடான பொள்ளாச்சிக்கு சென்று விட்டார். குழந்தை பிறந்த பிறகு 3 மாதம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவரின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்துள்ளார்.
விசாரித்தபோது, பாலசுப்பிரமணி, உடன் வேலை பார்த்து வந்த நித்யா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது, பிரபுவின் பெற்றோர் தங்கள் மகன் அப்படித்தான் இருப்பான் என மிரட்டியுள்ளனர். இதனால் ஜோதி முருகேஸ்வரி தனது தாய் வீட்டிற்கே சென்று விட்டார்.
இந்நிலையில், இரண்டாவது மனைவியை தொடர்ந்து, மூன்றாவதாக கரூர் தாந்தோன்றிமலையைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணை பாலசுப்பிரமணி திருமணம் செய்துள்ளார்.
இந்த தகவலறிந்து ஆத்திரமடைந்த முதல் மனைவி ஜோதி முருகேஸ்வரி கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாலசுப்பிரமணியை போலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், முதல் மனைவியை திருமணம் செய்துகொண்டு வரதட்சணையாக வந்த நகை மற்றும் பணத்தை செலவழித்துள்ளார். முதல் மனைவியிடம் மேலும் பணம் கிடைக்காததால் தான் பணிபுரியும் வங்கியில் பணிசெய்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண் கொடுத்த வரதட்சணை மூலம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
அந்தப் பெண்ணிடமும் பணம் பெற முடியாமல் போன பிறகு மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவரை கைது செய்த போலிஸார், ஏமாற்றிய கணவரின் பெற்றோர் மற்றும் இரண்டாவது மனைவியைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு முழுவதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 6,78,034 பேர் பயன்!” : அமைச்சர் மா.சு தகவல்!
-
“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!