Tamilnadu

“அ.தி.மு.க ஆட்சியின் பாராமுகத்தால்தான் SC/ST மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன” : திருமாவளவன் சாடல்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவைத் தமிழ்நாடு அரசு திருத்தியமைத்துள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சரின் தலைமையிலான குழுவில் தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு ஆண்டுக்கு இருமுறை முதலமைச்சர் தலைமையில் கூடி ஆய்வு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த விதிகள்-2018 மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு முதலமைச்சர் தலைமையில் ஆண்டுக்கு இருமுறை கூடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது.

இந்தக் குழு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீருதவி மற்றும் மறுவாழ்வு குறித்து ஆய்வுசெய்ய வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது இந்தக் குழு முறையாகக் கூட்டப்படவில்லை.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வினா எழுப்பியபோது தமிழ்நாட்டில் முதலமைச்சர் தலைமையிலான குழு பல ஆண்டுகளாகக் கூட்டப்படவில்லை என்ற விபரம் தெரிய வந்தது. அதன் பின்னர், உடனடியாகக் குழுவைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்றைய தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்தினோம்.

ஆனாலும்கூட அவர் எந்த அக்கறையும் காட்டவில்லை. அ.தி.மு.க ஆட்சியின் பாராமுகத்தால்தான் ஆதிதிராவிட மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு மாறியது.

2017 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையில் உத்தர பிரதேசத்தில் 452 சம்பவங்களில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென்றும்; அதற்கடுத்து மகாராஷ்டிராவில் 197 தாக்குதல்களில் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென்றும்; மூன்றாவதாக தமிழ்நாட்டில் 170 கலவர சம்பவங்களில் 246 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதுபோல அ.தி.மு.க ஆட்சியின்போது ஆதிதிராவிட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளிலும் தமிழ்நாடு முன்னணி வகித்தது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் 55 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டன. அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 26 பேர், 18 வயதுக்குக் குறைந்த சிறுமியர் 29 பேர். இப்போதைய ஆட்சியில் இந்த நிலை மாற்றப்படும் என்று நம்புகிறோம்.

விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு தற்போது முற்றிலுமாகத் திருத்தி அமைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி அது முனைப்பாக செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இடம்பெற்றுள்ளன. இதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம்.

மாநில அளவிலான குழுவைத் திருத்தி அமைப்பது போலவே மாவட்ட அளவிலான குழுக்களும் திருத்தி அமைக்கப்படுவதோடு அதை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆண்டுக்கு 4 முறை கூட்டி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய ஆணைகளைப் பிறப்பிக்குமாறும் மாநில அளவிலான குழுவை தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே கூட்டவேண்டுமென்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: அ.தி.மு.க ஆட்சியில் கோவை ஆவின் நிர்வாகத்தில் ரூ.100 கோடி ஊழல்... சிக்கும் முன்னாள் அமைச்சர், அதிகாரிகள்!