Tamilnadu

கட்டிக் கொண்டிருக்கும்போதே இடிந்த சுவர்... அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மருமகனின் ‘டெண்டர் ஜாலம்’!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் அரசு டெண்டர்களை தங்கள் உறவினர்களுக்கே வழங்கி, அவர்கள் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டு தரமற்ற வகையில் பணிகளை செய்ததால் பல இடங்களிலும் கட்டுமானங்கள் சிலகாலத்திலேயே இடிந்து விழும் அவலம் தொடர்கிறது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்.எல்.ஏவுமான ஓ.எஸ்.மணியனின் மருமகன் முத்துக்குமார் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் எடுத்து கட்டி வரும் குளத்தின் தடுப்புச் சுவர் இடித்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பால சமுத்திரம் குளத்தை கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அப்போதைய அ.தி.மு.க அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மருமகன் முத்துக்குமார் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் எடுத்து குளத்தின் நான்கு புறமும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை பால சமுத்திரம் குளத்தின் கிழக்குப் பகுதியில் தரமான முறையில் பில்லர் அமைக்காமல் கான்கிரீட் சுவர் கட்டியதால் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டதால் அவசர அவசரமாக இடிந்து விழுந்த சுவர்களை மணல் கொண்டு மூடி மறைத்துள்ளனர்.

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மருமகன் முத்துக்குமார் டெண்டர் எடுத்து தரமற்ற முறையில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் மருமகன் முத்துக்குமார் எடுத்துள்ள அனைத்து டெண்டர்களையும் நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊரில், அவரது மருமகன் டெண்டர் எடுத்துக் கட்டிய பணியில் இத்தகைய அவலம் ஏற்பட்டுள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Also Read: “அ.தி.மு.க ஆட்சியில் முறைகேடுகளால் அரசு கேபிள் டி.விக்கு ரூ.400 கோடி கடன்”: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!