Tamilnadu
“சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை”: தற்கொலைக்கு முயற்சித்த இளம்பெண் ‘பகீர்’!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதையடுத்து நண்பர்கள் உதவியுடன் சென்னை வந்த அவர் சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார்.
இப்படி வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு, அடையாறு பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. பிறகு கணேஷ், இளம்பெண்ணிடம் தனக்குத் தெரிந்த சினிமா இயக்குநர்களிடம் நடிகை வாய்ப்பு வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி அவரும் கணேஷ் உடன் நட்பாகப் பழகிவந்துள்ளார்.
மேலும் உன்னை பல விதங்களில் புகைப்படம் எடுத்து இயக்குநர்களிடம் காட்ட வேண்டும் எனக் கூறி, தனி அறைக்கு அழைத்துச் சென்று பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து கணேஷ் இரவு நேரங்களில் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, தனது நண்பர்களையே இயக்குநர்கள் என ஏமாற்றி இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார். மேலும் படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் இவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என கணேஷ் கட்டாயப்படுத்தியுள்ளார். சினிமா ஆசையால் கணேஷ் சொன்ன அனைத்தையும் கேட்டு வந்துள்ளார்.
ஆனால், கணேஷ் கூறியபடி பட வாய்ப்பு வாங்கி தராததால் இது குறித்துப் பல முறை அவரிடம் கேட்டுள்ளார். இதற்கு கணேஷ் முறையாகப் பதிலளிக்காமல், தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பிறகு ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் போலிஸார் இளம்பெண்ணை விசாரணைக்காக அழைத்துள்ளனர். விசாரணைக்குச் செல்லும் முன்பே மனமுடைந்த அந்தப் பெண் அதிகளவில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டதால், காவல்நிலையம் செல்லும்போது அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து அறிந்த போலிஸார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது, இளம்பெண் எழுதிய கடிதம் ஒன்றை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், சினிமா ஆசையில் எனது வாழ்க்கையைச் சீரழித்த கணேஷ் தான் என் சாவுக்கு முழுக் காரணம். எனக்கும் எனது குடும்பத்திற்கும் எது நேர்ந்தாலும் அதற்கு அவர்தான் காரணம் என எழுதப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து போலிஸார் தீவீரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”வாக்குகளை வெளிப்படையாகவே திருடும் பா.ஜ.க” : மீண்டும் ஆதாரங்களுடன் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
”S.I.R-ஐ துணிச்சலுடன் எதிர்க்கும் ஒரே கட்சி தி.மு.கதான்” : கரு.பழனியப்பன் பேச்சு!
-
டெல்லி குண்டு வெடிப்பு : வாய் கிழியப் பேசினால் போதுமா? அமித்ஷா பொறுப்பேற்க வேண்டாமா? - முரசொலி
-
தமிழ்நாடு அரசின் தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி? - முழு விவரம்!
-
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது... விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது... விவரம் உள்ளே!