Tamilnadu

நீட் தேர்வின் தாக்கம் குறித்து 165 பக்க அறிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்த ஏ.கே.ராஜன் குழு

நாடுமுழுவதும் மருத்துவp படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. இந்தத் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கானல் நீரானது. மேலும் அனிதா போன்று பல மாணவர்கள் மருத்துவராக முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தன. பின்னர் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயக் கடந்த 10ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவிற்கு, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா, சுபஸ்ரீ ஆகியோரின்பெற்றோரும், பொதுமக்களும், மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சிகள் என பலரும் நீட் வேண்டாம் என கோரி கடிதம் மூலம் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

கடந்த ஒரு மாதமாக நீதியரசர் ராஜன் தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினர்களின் கருத்துகளைப் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 86,342 பேர் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை தொகுத்த இக்குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.

இதையடுத்து நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீட் தேர்வின் தாக்கம் குறித்தான அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நீதியரசர் ஏ.கே.ராஜன், “நீட் தேர்வு தாக்கம் குறித்து 165 பக்க அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளோம்.

86 ஆயிரம் பேரிடமிருந்து கருத்துக்கள் வந்துள்ளது. இதில் நீட் வேண்டாம் என்பதே பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ளது. நீட் தேர்வு மாணவர்களை எப்படிப் பாதிக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மேகதாது அணையால் ஆபத்துதான்.. அதை எந்த வகையிலும் தடுத்தாக வேண்டும்” : முரசொலி தலையங்கம்!