Tamilnadu

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட் - என்ன காரணம் தெரியுமா?

பிரபல தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.

இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் வரி விதிக்க தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் காரை பதிவு செய்யாததால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர், நடிகர் என்று குறிப்பிட்டார்.

புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்வும் குறிப்பிட்ட நீதிபதி, வரி என்பது  கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும்  அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில்,அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரியைப் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரிஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டார். மேலும், நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் கொரோனா  நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்

Also Read: “பெட்ரோல் டீசல் விலை மூலம் வசூல் வேட்டை” : தேர்தல் முடிந்ததும் சுயரூபத்தை காட்டிய மோடி அரசு!