Tamilnadu
“மேகதாது அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம்” - கர்நாடக அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது, நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் புறக்கணிப்பது போன்றது என்று நீர்வளத்துறை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கும், விவசாயிகளுக்கும் கேடு விளைவிக்கும் மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய் தெரிவித்துள்ளார். இதற்கு, அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரை தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிற நீரை இடைமறித்து மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே புறக்கணிப்பது போன்றது.
மேலும் , நடுவர் மன்றத்தின் தீர்ப்பிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது. அது தேசிய சொத்து என்று தீர்ப்புரைத்திருப்பதை கர்நாடக மாநில அமைச்சர் அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன்.
இவ்வளவையும் மீறி அணை கட்டுவோம் என்று சொல்வது, நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் மதிக்கமாட்டோம் என்று சொல்வதுபோல் தெரிகிறது. இது ஒரு ஜனநாயக நாடு, இத்தகைய போக்கு ஒரு மாநிலத்திற்குள் வளர்வதை ஒன்றிய அரசு பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல. அண்டை மாநிலத்தின் உறவிற்கும் இது உகந்ததல்ல.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் சொல்வதைப் போல், எந்த நிலையிலும் சட்டப்படி அதை தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கும் எங்களுக்கு உரிமை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!