Tamilnadu
மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வருகிற 12-7-2021 அன்று தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும், அண்மையில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து, இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபடத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்களுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்கள்
இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது தலைமையில், வருகிற 12-7-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10-30 மணியளவில், தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றக்கட்சிகளுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!